வ.உ.சி., மைதானத்தில் ஆம்னி பஸ் நிறுத்தினால் ரூ.1,000 அபராதம்
கோவை; கோவை வ.உ.சி., மைதானத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்களை நிறுத்தினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.கோவை - சத்தி ரோட்டில், புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பஸ் ஸ்டாண்ட், சமீபத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பஸ்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதனால், வ.உ.சி., மைதானத்தில் ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மைதானம் முழுவதும் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியது.மத்திய மண்டல மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நுழைவாயிலை மூடினர். 'மைதான வளாகத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் நிறுத்தக் கூடாது; மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்து, மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் பெயரில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது.அதனால், அவிநாசி ரோட்டில் தனியார் பள்ளிக்கு முன்புள்ள பகுதியில், வரிசையாக தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.