உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் மின்இணைப்பு பெற்றதும் பயன்பாட்டுக்கு வரும்

வேளாண் அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் மின்இணைப்பு பெற்றதும் பயன்பாட்டுக்கு வரும்

ஆனைமலை; ஆனைமலை வேளாண் அலுவலக புதிய கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை ஒன்றிய அலுவலக வளாகத்தை ஒட்டி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகம் செயல்பட்டது. தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், இரண்டு அறைகளும், வேளாண்துறை அலுவலகத்தில், இரண்டு அறைகளும் இருந்தது. கட்டடம் கட்டப்பட்டு, 50 ஆண்டுகள் ஆனதால், இரண்டு அலுவலக கட்டடங்களின், மேற்கூரையின் கான்கிரீட் உதிர்ந்து விழுவதுடன், பக்கவாட்டு சுவர்கள் உருக்குலைந்தும், உட்புற சுவர்களின் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்தன.இதனால், வேளாண் அதிகாரிகளும், விவசாயிகளும், கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.வேளாண்மை துறை அலுவலகம், தற்காலிகமாக இடமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், புதிய கட்டடம் கட்டும் பணிகள் தாமதமானது.அதன்பின், சப் - கலெக்டர் ஆய்வு செய்து, தற்காலிகமாக ஆனைமலை சமுதாய நலக்கூடத்துக்கு வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.அங்கு அலுவலகம் மாற்றப்பட்ட பின், ஓர் ஆண்டுக்கு முன் பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், 2.2 கோடி ரூபாய் செலவில், இரண்டு அடுக்கு கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன.அதில், கீழ் தளத்தில் உரம், விதை, போன்ற இடுபொருட்கள் வைக்கும் இருப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.முதல் தளத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விதை சான்று துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைத்துறை, மற்றும் வேளாண் சார்ந்த மற்ற அலுவலகங்கள் செயல்படும் வகையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இரண்டாம் தளத்தில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்ய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம் கட்டும் பணி தற்போது நிறைவடைந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கட்டடத்துக்கு மின் இணைப்பு பணிகள் முழுமை பெற்ற பின், கட்டடம் திறக்கப்பட உள்ளதாக, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ