ஆக்கிரமிப்பில் ஒரு ஏக்கர் விளையாட்டு மைதானம்; மேல்முறையீடு செய்யாமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்
கோவை; கோவை, சுந்தராபுரம் அருகே, 94வது வார்டு அஷ்டலட்சுமி நகரில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள விளையாட்டு மைதானத்தை மீட்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக இருக்கின்றனர்.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில், 94வது வார்டில் அஷ்டலட்சுமி நகர் உள்ளது. குறிச்சி பேரூராட்சியாக இருந்தபோது, இந்த லே-அவுட் உருவாக்கப்பட்டு, நகர ஊரமைப்புத் துறையில் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.மொத்தம், 12.98 ஏக்கர் பரப்பு கொண்டது. 133 மனைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக, 117.35 சென்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியாக, 11.47 சென்ட், கடைகளுக்காக மூன்று இடம் ஒதுக்கப்பட்டது.இதில், பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, அப்பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி நிறுவனத்தினர் ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது.மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஆய்வு செய்து, விளையாட்டு மைதானம் பகுதியில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை வைத்தனர்.அவ்விடத்தை, பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக கூறி, தனியார் பள்ளியை நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதில், நான்கு வார காலத்துக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து, அறிவிப்பு பலகை அகற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்து, அவ்விடத்தை மீட்க வேண்டும்.ஏனெனில், லே-அவுட் உருவாக்கும்போது, 10 சதவீத இடம் பொது ஒதுக்கீடாக, உள்ளாட்சி அமைப்புக்கு வழங்க வேண்டும் என்பது விதிமுறை.அதன்படி, பள்ளி மற்றும் விளையாட்டு மைதான உபயோகத்துக்காக, லே-அவுட் உருவாக்கியவர்கள் ஒதுக்கிய இடம் என்பதால், மாநகராட்சிக்கு சொந்தமானது.அவ்விடத்தில், மாநகராட்சி சார்பில் பள்ளி கட்டலாம்; அங்கன்வாடி மையம் உருவாக்கலாம். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் உருவாக்கிக் கொடுக்கலாம்.விளையாட்டு மைதானமாக உபயோகிக்கிறார்கள் என்பதற்காக, தாரை வார்க்கவும் முடியாது. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவ்விடத்தை மீட்பதற்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித முயற்சியும் எடுக்காமல், கிடப்பில் போட்டுள்ளனர்.
'மீட்கப்படும்'
இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டதற்கு, ''94வது வார்டு அஷ்டலட்சுமி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பில் உள்ளது; அவ்விடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஐகோர்ட்டில் தடையுத்தரவு பெற்று, அறிவிப்பு பலகையை அகற்றியுள்ளனர். மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்து, அவ்விடம் கண்டிப்பாக மீட்கப்படும்,'' என்றார்.