உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிந்துரைத்த இடுபொருட்களை மட்டும் தென்னைக்கு இடுங்கள்

பரிந்துரைத்த இடுபொருட்களை மட்டும் தென்னைக்கு இடுங்கள்

கோவை: தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடுபொருட்களை மட்டும் பயன்படுத்தும்படி, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வேளாண் இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி அறிக்கை: ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக் கொல்லிகளை தனித்தனியாக வாங்கி, ஒன்றுடன் ஒன்று கலந்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மத்திய அரசின் பூச்சி மருந்து வாரியம் மற்றும் பதிவு செய்தல் குழுவில் பதிவு செய்யப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். பரிந்துரை செய்யப்படாத பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர இடுபொருட்களை தென்னையில் பயன்படுத்தினால், அதிக மகசூல் கிடைக்கும் என்ற உரிமம் பெறாத தனியார் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களை, நம்பி ஏமாற வேண்டாம். தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் பிரச்னைக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் வேளாண் பல்கலை, எவ்விதமான பூச்சிக்கொல்லிகளையும் பரிந்துரை செய்வதில்லை. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகள் வாயிலாக உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் இயற்கை தாவர பூச்சிக் கொல்லிகள் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றன. வேளாண் துறையின் பரிந்துரை: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செய்ய, மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில், தாவர எண்ணெயைத் தடவி, 2 மரங்களுக்கு இடையில் ஆறு அடி உயரத்தில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் தொங்க வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். ஓலைகளின் அடிப்புறத்தில் நீரைப் பீய்ச்சி தெளிக்க வேண்டும். கிரைசோபிட் எனும் பச்சைக் கண்ணாடி பூச்சி இரை விழுங்கிகளை, ஹெக்டருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகளை, ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், தென்னை ஓலைகளுடன் இணைக்க வேண்டும். தாவரப் பூச்சிக் கொல்லிகளான வேப்ப எண்ணெயை, லிட்டருக்கு 30 மில்லி நீரில் கலந்து ஓலையின் அடிப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். அராடிராக்டின் மருந்தையும் தெளிக்கலாம். பூச்சிகளின் எச்சத்தால், ஓலைகளின் மீது வளரும் கரும்பூசணத்தை சரி செய்ய, மைதா மாவுக் கரைசலை ஓலை நன்கு நனையும்படி தெளிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ