வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு! வரும் 23, 24ல் இரண்டாம் கட்ட முகாம்
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம், 29ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடந்தது.வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 68 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டது. எஸ்டேட் பகுதியில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தனர்.அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கத்துக்கு படிவம் -7, வாக்காளர் அட்டையில் திருத்தம், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் -8, விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். தங்களது பெயர் உள்ளதா என்றும் ஆர்வத்துடன் மக்கள், பட்டியலை பார்வையிட்டனர்.வரும், 23 மற்றும், 24ம் தேதிகளில், சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களிலும், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது.எனவே, 2025 ஜன.,1ம் தேதியில், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய, ஆதார் எண் இணைத்திட வரும், நவ.,28ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் மேற்கொள்ளும் வகையில், உடுமலை தொகுதியில், 129 ஓட்டுச்சாவடி மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகளிலும்; மடத்துக்குளம் தொகுதியில், 119 ஓட்டுச்சாவடி மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், ஆதார் இணைப்புக்கு மக்கள் விண்ணப்பம் கொடுத்தனர். இரண்டாம் கட்ட முகாம், வரும், 23, 24ம் தேதி அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவும், Voters Help Line App என்ற மொபைல்செயலி வாயிலாகவும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். இம்மாதம், 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பொதுமக்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம், என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். - நிருபர் குழு -