புதிய கார் பழுதானதால் இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை : புதிதாக வாங்கிய கார் பழுதானதால் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, பொன்னையராஜபுரத்தை சேர்ந்த குருநாத் வசந்த் என்பவர், சவுரிபாளையத்திலுள்ள எஸ்.ஜி.ஏ., கார்ஸ் நிறுவனத்தில், 2019ல், ஸ்கோடா ரேபிட் என்ற காரை, ரூ.12.08 லட்சத்திற்கு வாங்கினார். காருக்கு 2023 வரை, நான்கு ஆண்டுகள் 'வாரன்டி கார்டு' வழங்கப்பட்டது.இந்நிலையில், 2022, டிச., 21ல், கோவை - பெங்களூரு சென்ற வழியில், சேலத்தில் கார் பழுதானது. அங்குள்ள 'ஸ்கோடா' அங்கீகாரம் பெற்ற, சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்கப்பட்டது. இதற்காக, 50,659 ரூபாய் கட்டணம் செலுத்தினார். காருக்கு வாரன்டி இருப்பதால், பழுது நீக்கிய தொகையை கேட்டு பில் கொடுத்த போது, பணம் கொடுக்க கார் விற்பனை செய்த நிறுவனம் மறுத்தது. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: காருக்கு வாரன்டி காலஅவகாசம் இருந்தும், சர்வீஸ் தொகை வழங்க மறுத்தது, சேவை குறைபாடாகும். மனுதாரர் செலவழித்த, 50,659 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டனர்.