வீட்டு கடன் பெற்றவர் இறந்ததால் ஆவணம் திருப்பி கொடுக்க உத்தரவு
கோவை; கோவை மாவட்டம், ஆனைமலையை சேர்ந்தவர் கனகராஜ்,50. வீடு கட்ட மும்பையை தலைமையிடமாக கொண்ட, 'வஸ்து ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனத்தில், 2018ல், 5.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்கான தவணை தொகை மாதந்தோறும், 9,668 ரூபாய் செலுத்தி வந்தார். கடன் பெற்றதற்கான தொகைக்கு, 2026- வரை இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் கனகராஜ் இறந்தார்.இன்சூரன்ஸ் செலுத்தி வந்ததால், அவர் இறந்த பிறகு, வீட்டு கடனை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி புஷ்பா விண்ணப்பித்தார். ஆனால், தொடர்ந்து தவணை தொகை செலுத்துமாறு, கடன் கொடுத்த நிறுவனம் வற்புறுத்தியதால்,பாக்கி தொகை முழுவதும் செலுத்தினார்.இதனால் வீட்டு கடனை ரத்து செய்து, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், புஷ்பா வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் வசூலித்த பாக்கித்தொகை, 3.77 லட்சம் ரூபாயை திரும்ப கொடுப்பதுடன், கடன் கணக்கை ரத்து செய்து, அதற்கான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.