விஜய் கட்சியில் பூத் கமிட்டியை பலப்படுத்த உத்தரவு! வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பங்கேற்க அறிவுரை
கோவை : நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து, பூத் கமிட்டியை பலப்படுத்தவும், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவையில் இருந்து மாவட்டம் வாரியான சுற்றுப் பயணத்தை துவக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சி செயல்பாடுகளை விமர்சித்தால், ஆக்கப்பூர்வமாக பதிலளியுஙகள். ஆதாரத்துடன் பதிலளியுங்கள்; தரம் தாழ்ந்த விமர்சனத்தை கண்டுகொள்ளாதீர்கள். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்; அனைத்து பகுதிகளிலும் கிளைகள் துவக்க வேண்டும். கட்சி கட்டமைப்பை பலப்படுத்த நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். வார்டு வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும்.அறிவுரைமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்; அதை வீடியோ எடுத்து, 'வாட்ஸ்ஆப்' ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும். கட்சியின் செயல் திட்ட அறிக்கை நோட்டீஸ் தலைமையில் இருந்து அனுப்பி வைக்கப்படும்; வீடு வீடாக சென்று மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' நடத்தியபோதே, பூத் கமிட்டி இருக்கிறது. கட்சி துவங்குவதற்கு முன்பே, பூத் கமிட்டி அமைத்து உறுப்பினர்கள் நியமித்துள்ளோம். இதை பலப்படுத்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 10 பேர் இடம் பெறுவர்; பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்படும். கட்சியில் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே இருக்கின்றனர். மகளிரணி பலமாக இருக்கிறது. சிறப்பு திருத்த முகாம்
இம்மாதத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. அம்முகாமில், த.வெ.க.,வினர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட வேண்டும். இதுநாள் வரை தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அம்முகாம்களில் அமர்வர். இனி, நாங்களும் செல்ல வேண்டும் என கூறியிருப்பதால், ஒவ்வொரு முகாமுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.கோவையில் இருந்தே மாவட்டம் வாரியான சுற்றுப்பயணத்தை, தலைவர் விஜய் துவக்க இருக்கிறார்; இன்னும் தேதி உறுதியாகவில்லை. நலத்திட்ட உதவிகள் வழங்க, எந்தெந்த இடங்களுக்கு என்னென்ன தேவை என பட்டியல் அனுப்பச் சொல்லியிருக்கின்றனர். இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை கட்சியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.யாருக்கும் பயப்படாமல் செயல்படுங்கள்; வக்கீல் அணி இருக்கிறது; சட்டப்பிரிவு செயல்படுகிறது; சட்டப்பூர்வமாக இறங்கி செயல்படுங்கள் என கூறியுள்ளனர். எல்லா கட்சியினரும் பயத்துடன் இருக்கின்றனர்.தரம் தாழ்ந்த விஷயத்துக்கு பதில் கொடுக்க வேண்டாம். மக்களுக்கு நன்றாகத் தெரியும்; இவ்வளவு நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்று அரசியலை நாம் கொண்டு வருகிறோம். அனைத்து தரப்பிலும் வரவேற்பு இருக்கிறது. பொதுமக்களை தேடி நாங்கள் போவதற்கு முன், அவர்களே எங்களைத் தேடி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.