வேளாண் பல்கலையில் ஆர்கானிக் கண்காட்சி
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அங்கக வேளாண்மை குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. பட்டமளிப்பு விழா அரங்கில் நாளை நடக்கும் நிகழ்வில், அங்கக வேளாண்மை தொடர்பான தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளன. முன்னோடி விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கோவை, நம்மாழ்வார் அங்கக வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துரையாடுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாரங்களில் இருந்தும் விவசாயிகளை அழைத்து வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.