உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பூர் பஸ்களில் அலைமோதும் கூட்டம்: அவதிக்குள்ளாகும் பயணியர்

திருப்பூர் பஸ்களில் அலைமோதும் கூட்டம்: அவதிக்குள்ளாகும் பயணியர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்பூருக்கு அதிகப்படியான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்லடம் வழித்தடத்தில் இந்த பஸ்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் பயணம் செய்கின்றனர். அதிலும், காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் பஸ்சில் பயணித்தால் மட்டுமே, உரிய நேரத்திற்குள், பல்லடம் மற்றும் திருப்பூர் சென்றடைய முடியும். அதனால், காலை நேரத்தில், திருப்பூர் செல்லும் பஸ்சில், பயணியர் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. அந்த நேரத்தில், பல்லடம் கிளை பஸ்களே அதிகம் இயக்கப்படுகிறது. ஆனால், பல நாட்களில், பஸ்களின் இயக்கம் குறைந்து விடுவதால், பயணியர் பரிதவிக்கின்றனர். பயணியர் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து பல்லடம், திருப்பூர் மட்டுமின்றி, இடையே நெகமம், சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பலர், பணி நிமித்தமாக சென்று திரும்புகின்றனர். அவ்வாறு இருக்கையில், காலை நேரத்தில், முறையாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. அடுத்த பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து, 65 கி.மீ. துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில், திருப்பூர் வழித்தடத்தில் அதிகப்படியான பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். அதிகாரிகள் கூறுகையில், 'பல்லடம் கிளை சார்பில் இயக்கப்பட்டு வந்த இரு பஸ்கள் தற்காலிகமாக வருவதில்லை. இதனால். காலை, மாலை நேரத்தில் திருப்பூர் பஸ்களில் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்து இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ