ஊராட்சியில் 25 நாட்களாக குடிநீரின்றி தவிப்பு; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு வடசித்துார் ஊராட்சியில், 25 நாட்களாக குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசித்துார் ஊராட்சியில், ஐந்து சிற்றுார்கள் உள்ளன. இங்கு, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு ஒரு மேல்நிலைத் தொட்டி மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு இரண்டு தரைமட்ட தொட்டி உள்ளது.295 கிராம குடியிருப்பு திட்டம் மற்றும் சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக வடசித்துார் ஊராட்சி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக, தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் திட்டத்தின் வாயிலாக, கடந்த 10 நாட்களாக வடசித்தூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இதனால், ஊராட்சியில் தற்போது சமத்துவபுரம் மற்றும் பள்ளிவாசல் முதல் மேட்டுக்கடவு பகுதி மக்களுக்கு, கடந்த 25 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் இருக்கிறது.இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.சிலர் கிணத்துக்கடவு வரை வந்து கேன் மற்றும் குடங்களிலும் குடிக்க தண்ணீர் பிடித்து செல்கின்றனர். சிலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனர்.இதை சரி செய்ய, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் வடசித்துாரில் ஆய்வு மேற்கொண்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதிகாரிகளும் தொடர்ந்து பிரச்னைக்கு தீர்வு தேடி வருகின்றனர்.எனவே, வடசித்தூர் ஊராட்சி மக்கள் நலன் கருதி, விரைவில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.