மேலும் செய்திகள்
அவலங்கள் நிறைந்த அண்ணா காலனி பூங்கா
03-Apr-2025
கோவை; கோவை மாநகராட்சி நிதியில் உருவாக்கப்பட்ட பூங்காக்கள் பயன்பாடின்றி, புதர்மண்டி காணப்படுவதாலும், சிறுவர்கள் விளையாடுவதற்கான சாதனங்கள் பராமரிப்பின்றி உடைந்து கிடப்பதாலும், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வராக கருணாநிதி பதவி வகித்தபோது, செம்மொழி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதன் நினைவாக, பல லட்சம் ரூபாய் செலவழித்து, நகரெங்கும் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றை மாநகராட்சி பொறியியல் பிரிவினர் முறையாக பராமரிக்க தவறி விட்டனர்.வளாகம் முழுவதும் புதர்மண்டிக் கிடக்கிறது. மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் குப்பையாய் பரவியுள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. சில இடங்களில் புதருக்குள் காணப்படுகின்றன. சில பூங்காக்களில் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் அருவருப்பாக காணப்படுகின்றன.உதாரணத்துக்கு, 80 அடி ரோட்டில் உள்ள பூங்கா புதர்மண்டி இருக்கிறது. அழகேசன் ரோட்டில் உள்ள பூங்காவில் விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன. ஜி.என்.மில்ஸ் பூங்காவில் விளையாட முடியுமா என கேட்கும் அளவுக்கு சாதனங்கள் பயமுறுத்துகின்றன. கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுக்குள் உள்ள பூங்காவில், மாநகராட்சி பெயர் பலகை மட்டும் பளபளக்கிறது; வளாகம் முழுவதும் புதர்மண்டி இருக்கிறது. உருமாண்டம்பாளையம் பூங்கா அவலத்தின் உச்சமாக காணப்படுகிறது. கணேசபுரம் பூங்கா பாம்புகளின் கூடாரமாக இருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில், பல லட்சம் ரூபாய் செலவழித்து, உருவாக்கப்பட்ட பூங்காக்களை முறையாக பராமரிக்காமல், மாநகராட்சி வீணடித்து வருவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
03-Apr-2025