உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

கோவை; கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், மும்பை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கோவை விமான நிலையத்தில் இருந்து, சர்வதேசம், 80 ஆயிரத்து, 976, உள்நாடு, 8.70 லட்சம் என, மொத்தம், 9.51 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதே கால கட்டத்தில் கடந்த நிதியாண்டு, 7.83 லட்சம் பயணிகள் மட்டுமே பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 21 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், 3.12 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். ஜூன் 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில், இது, 21 சதவீதம் அதிகம். சரக்கு போக்குவரத்தும் கடந்தாண்டை ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சர்வதேசம், 575, உள்நாடு, 2,513 என, மொத்தம், 3,089 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.

'கூடுதல் வசதிகள் தேவை'

கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறுகையில்,''கோவை சர்வதேச விமான நிலையம், நிதியாண்டின் முதல் காலாண்டில், பயணிகளின் எண்ணிக்கையில் அதிகபட்ச உயர்வை பதிவு செய்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேற்கு மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விமான நிலையத்துக்கு தேவையான வசதிகளை செய்து தர, விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை