டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை, கழிவுகள்: தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் அருகே குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி மின்கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், பெருகும் குடியிருப்புகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, தாழ்வழுத்த பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு, புதிய டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்படுகிறது. இருப்பினும், மக்களிடையே விழிப்புணர்வு இன்மை காரணமாக, டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் அருகே குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, மின்வாரிய பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் ராஜா கூறியதாவது: டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் அருகே கொட்டப்படும் குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிக துர்நாற்றம் காரணமாக, பணியாளர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மின் பழுது சரிபார்ப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், நில இணைப்பு (எர்த்திங்) கிடைக்காமல் டிரான்ஸ்பார்மர் பழுதாக வாய்ப்புள்ளது. காய்ந்த குப்பைகள் மற்றும் காகிதங்கள் இருப்பதன் காரணமாக, தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. தவிர, உணவுக் கழிவுகளை உட்கொள்ள வரும் கால்நடைகள், பறவைகள் வாயிலாக மின் தடைகள், மின் விபத்துகள் ஏற்படும். எனவே, மக்கள், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் அருகே குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.