உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தி ரோட்டில் வாகனம் ஓட்ட தனி சக்தி வேண்டும்; விரிவாக்கம் செய்யப்படாததால் மக்களுக்குதினமும் சிரமம்

சத்தி ரோட்டில் வாகனம் ஓட்ட தனி சக்தி வேண்டும்; விரிவாக்கம் செய்யப்படாததால் மக்களுக்குதினமும் சிரமம்

கோவை; ஆண்டுகள் பல கடந்தும் சத்தி ரோடு விரிவாக்கப்பணிகள் காகிதங்களிலேயே உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை மாநகரம் விரிவடைந்து வருகிறது. புறநகராக இருந்த சரவணம்பட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.கோவையின் மையப்பகுதியுடன், சரவணம்பட்டியை சத்தி ரோடு இணைக்கிறது. கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல், சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த ரோட்டை பயன்படுத்தும் பலரும் தினமும், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில், கணபதி வேலன் தியேட்டரிலிருந்து, சூர்யா மருத்துவமனை வரை, ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக நகர ஊரமைப்பு துறையிடம் நிதி கோரப்பட்டது. இதற்கான நிதியை வழங்க மாநகராட்சி நகர் மன்ற கூட்டத்தில், 2020ம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விரிவாக்கத்துக்காக, 152 பேரிடம் இருந்து, 73 ஆயிரத்து, 250 சதுரஅடி நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் ஏற்கப்பட்டு, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ரூ.38.64 லட்சம் நிதி ஒதுக்கி, 2021ல் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம், அரசு துறை அதிகாரிகள் மற்றும் கோவை எம்.பி., ராஜ்குமார் இணைந்து இப்பகுதிகளில் ஆய்வு செய்து, இதற்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தனர்.ஆனால், ஓராண்டு கடந்து விட்ட நிலையில், இதுவரை விரிவாக்கத்துக்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அறிவிப்பு வெறும் காகிதத்தில்தான் உள்ளது.போக்குவரத்து நெரிசலால், தினமும் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் படும் சிரமம் குறித்து, ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை.

மக்கள் சிரமம் தீரவில்லை

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரிவாக்கத்துக்கான பணிகள் அனைத்தும், விரைவில் துவங்க உள்ளன. விசுவாசபுரம் பகுதியில் இருந்து, முதற்கட்டமாக விரிவாக்க பணிகள் துவங்க உள்ளன. கணபதி வேலன் தியேட்டர் பகுதியில், விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் ஆர்ஜிதம் மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.இந்த 'கதையை' இன்னும் எத்தனை நாளைக்கு சொல்வார்களோ தெரியவில்லை. மக்கள் அனுபவிக்கும் சித்ரவதை தீரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை