| ADDED : மார் 13, 2024 01:39 AM
அன்னூர்:மத்திய அரசின், சோலார் இலவச மின்சார திட்டத்தில், சிறப்பு முகாம் அன்னூர் தபால் அலுவலகத்தில் நடந்தது.மத்திய அரசு, நாடு முழுவதும், ஒரு கோடி வீடுகளில் சோலார் மின்சார பேனல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. சோலார் மின்சார பேனல் அமைக்கப்படும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் அன்னூர், அவிநாசி ரோட்டில் உள்ள, தபால் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.முகாமில் தபால் அலுவலர்கள் கூறுகையில்,' இந்தத் திட்டத்தில் ஒரு கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மானியம் 30,000 ரூபாய் வழங்கப்படும். இரண்டு கிலோ வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். 60 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது.வாடகை வீட்டில் குடியிருப்போரும் தங்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால் விண்ணப்பிக்கலாம். வீடு மாற்றிச் செல்லும்போது சுலபமாக பிரித்து வேறொரு இடத்தில் அமைத்துக் கொள்ளலாம்.ஒரு கிலோ வாட் சோலார் பேனல் ஒரு நாளில் குறைந்தது 4 யூனிட் முதல் ஐந்தரை யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும். ஆறு மாதத்திற்கு உட்பட்ட மின் கட்டண ரசீது ஒன்று, மின் இணைப்பு எண், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்,' என்றனர்.