உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி; கேமரா பொருத்தியது வனத்துறை

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி; கேமரா பொருத்தியது வனத்துறை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூர் மலையோர கிராமத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவனூர் அருகே உள்ள திருமாலூர் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தை நடமாடுகிறது. இதனால் அப்பகுதி தோட்டங்களில் வசிக்கும் மக்கள், கால்நடைகளை மேய்க்க முடியாமல், அவதிப்படுவதாக புகார் எழுப்பி உள்ளனர்.கிராம மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுவரை, 2 ஆடுகள் மற்றும், 2 நாய்களை சிறுத்தை கொன்று விட்டது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், 'சிறுத்தை இல்லை, கரடி' என்று கூறுகின்றனர். எங்களுடைய தோட்டப்பகுதிகளில் கூட கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவிக்கிறோம். யானை போன்ற விலங்குகள் வந்தால், பட்டாசு வெடித்தால் சென்று விடுகின்றன. ஆனால், சிறுத்தை, மனிதர்களை கொல்லும் இயல்புடையது என்பதால், அதை விரட்ட முடியாமல் இருக்கிறோம். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் கூறுகையில், ''கோவனூர், திருமாலூர் பகுதியில் சிறுத்தை வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தணிக்கை பணி மேற்கொள்ளப்பட்டது. இங்கு சிறுத்தையின் கால் தடம் முழுமையாக கிடைக்கவில்லை. சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்த நபர்களின் குறிப்புகளை கொண்டு சிறுத்தையா என, உறுதிப்படுத்த இயலாத காரணத்தால், அப்பகுதியில் 'தானியங்கி கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. ''தோட்டப்பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. அதை வெட்டி ஒதுக்க தோட்ட உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரு வார காலத்துக்கு, வனத்துறையின் இரவு நேர பணியாளர்கள் முகாமிட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி