டிரான்ஸ்பார்மரை இடமாற்ற எதிர்ப்பு அதிகாரிகள் வராததால் மக்கள் அதிருப்தி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை, வால்பாறைக்கு கொண்டு செல்வதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி ஜோதிகார்டன், பாலாஜி நகர் பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மின்சார வோல்ட் குறைவாக இருந்ததால், புதியதாக, 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களையும் அனுப்பி வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, சில நாட்களுக்கு முன், இங்கு மின்வாரியம் வாயிலாக டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்று, புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் வால்பாறைக்கு கொண்டு செல்வதாக தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் கூறியதாவது: ஜோதிகார்டன், பாலாஜி நகர், பாலாஜி நகர் எக்ஸ்டன்சன் பகுதிகளில், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், இங்கு மின்சார வோல்டேஜ், 200க்கும் குறைவாக இருந்து வந்ததால் பல வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைகிறது. இதற்கு தீர்வு காண, 'டிரான்ஸ்பார்மர்' புதியதாக வைக்கப்பட்டது.பொதுமக்கள் சார்பாக பூஜை போட ஏற்பாடு செய்யப்பட்டது. மின்சார வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை முதல் இடமாற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மின்வாரிய அதிகாரிகள், இங்கு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை, வால்பாறை பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினர்.இங்கு புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை மாற்றித்தான் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமா; வேறு டிரான்ஸ்பார்மர் இல்லையா என தெரியவில்லை. அதிகாரிகள் வராத சூழலில், நாங்களே புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மருக்கு பூஜை நடத்தியுள்ளோம். இந்த டிரான்ஸ்பார்மரை இங்கு இருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, கூறினர்.அதிகாரிகள் யாரும் வராத சூழலில், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எழுதி அனுப்ப மக்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரியம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.