இறைச்சி கழிவுகளால் கொந்தளிக்கும் வெள்ளலுார் மக்கள்!
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கில், கோழிக்கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே புதைப்பதால், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தினமும், மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என, 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்ட இக்குப்பையால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் அனுதினமும் அவஸ்தையை சந்திக்கின்றனர்.'கொரோனா' சமயம்போல், இப்போதும் துர்நாற்றத்தை தவிர்க்க, அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு வாழ்க்கை நடத்தும் அவலம் தொடர்கிறது. பனி காலத்தில், 3 கி.மீ.,க்கு அப்பால் வரை துர்நாற்றம் வீசுகிறது என்றால், அருகாமையில் வசிப்பவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.தவிர, வெயில் காலத்தில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதும், புகை மண்டலத்தால் அப்பகுதி சூழ்வதும் கூடுதல் பிரச்னை. இந்நிலையில், மாநகரில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு கையாளப்பட்டது. இதற்கென குப்பை கிடங்கு வளாகத்தில் இருக்கும் கோழி கழிவு மையத்தில், தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, மேலாண்மை செய்யப்பட்டு வந்தது. இந்நிறுவனம் சரிவர கையாளாததால் அனுமதியை மாநகராட்சி ரத்து செய்தது.வெள்ளலுார் கிடங்கு குப்பை வருவதை தடுக்க போராட்டம் வலுத்து வரும் வேளையில், இறைச்சி கழிவுகளும் குழி தோண்டி புதைக்கப்படுவது அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் பாதிக்காத அளவுக்கு, ஒரு லேயர் மட்டும் கொட்ட கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். அதையும் மீறி, 5 அடிக்கும் மேல் குழி தோண்டி கோழி கழிவுகளை கொட்டி வருவது மக்களிடம் ஆத்திரத்தை கூட்டியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடி தீர்வு காணவில்லையேல், போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்கின்றனர், வெள்ளலுார் சுற்றுவட்டார மக்கள்.
ஒரு வாரத்துக்குள்...!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''ஞாயிற்றுக்கிழமை மட்டும், 17 டன் வரை இறைச்சி கழிவுகள் வருகின்றன. இவற்றை 'ஷீட் லேயர்' அமைத்து அதன்மேல் கொட்டி மூட அறிவுறுத்தியுள்ளோம். கேரளாவில் இதற்கென மிகப்பெரிய 'பிளான்ட்' உள்ளது. அங்கும், மதுரை, மேட்டுப்பாளையத்துக்கும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளலுார் குப்பை கிடங்குக்கே கோழி இறைச்சி கழிவுகள் வராத வகையில் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.