திறந்தவெளி பார் ஆக மாறிய நிழற்கூரைகளால் மக்கள் அவதி
வால்பாறை; வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு மக்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், புதுத்தோட்டம், மாணிக்கா, நல்லகாத்து, வாட்டர்பால்ஸ், காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில், பயணியர் நிழற்கூரைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.இந்நிலையில், பிற எஸ்டேட் பகுதியில் நகராட்சி சார்பில் ஏற்கனவே கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை மேக்கப் செய்து, புதிய நிழற்கூரைகளாக மாற்றப்பட்டுள்ளன.எஸ்டேட் பகுதியில் உள்ள நிழற்கூரையில் மாலை நேரங்களில் 'குடி'மகன்களின் திறந்தவெளி பாராக மாறி வருகின்றன. இதனால், மறுநாள் காலையில் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் மக்கள் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.பொதுமக்கள் கூறியதாவது: மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிழற்கூரையில், பகல் நேரத்திலேயே 'குடி'மகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பயணியர் ரோட்டில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.மேலும், பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளேயும், வெளியேயும் மது பாட்டில்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, நிழற்கூரைகளில் அத்துமீறும் 'குடி'மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.