தோட்டக்கலை அதிகாரிகளுக்கு பூச்சி கட்டுப்பாடு பயிற்சி
கோவை : கோவை, வேளாண் பல்கலை பயிர்ப் பாதுகாப்பு மையத்தின், வேளாண் பூச்சியியல் துறை சார்பில், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகள் உற்பத்தி மற்றும் பயன் குறித்த பயிற்சி நடந்தது.தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாடு மேற்கொள்வது குறித்த இப்பயிற்சியை, பூச்சியியல் துறை தலைவர் முருகன் பயிற்சியைத் துவக்கி வைத்தார்.ஒட்டுண்ணிகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் முறை குறித்து, இணைப் பேராசிரியர் பிரீதா, நெல் அந்துப்பூச்சியின் உற்பத்தி குறித்து, பேராசிரியர் ஜான்சன் தங்கராஜ் எட்வர்ட், இரைவிழுங்கிகள் குறித்து உதவி பேராசிரியர் அழகர், மரவள்ளி மாவுப்பூச்சிக்கான ஒட்டுண்ணி குறித்து இணைப் பேராசிரியர் சரவணன் விளக்கினர். ஒட்டுண்ணி ஆய்வகத்தில், தென்னையைத்தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 25 தோட்டக்கலை அதிகாரிகள் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவில், பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், பயிர்ப்பாதுகாப்பு இயக்கக இயக்குநர் சாந்தி ஆகியோர், சான்றிதழ் வழங்கினர்.