கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த எம்.பி.,யிடம் மனு
கோவை; கோவை, இந்திய தொழில் வர்த்தக சபையின் ஆட்சிக்குழு கூட்டம், ஒத்தக்கால் மண்டபத்தில் நடந்தது. வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பங்கேற்றார். அவரிடம் தொழில் வர்த்தக சபை சார்பில், 'கோவை சர்வதேச விமான நிலை விரிவாக்கத்தை துரிதப்படுத்துதல், ரயில்வே துறை சார்ந்த உள்கட்டமைப்புகள், மேற்கு மற்றும் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்துதல், கோவை, கரூர் விரைவுசாலை பணிகளை வேகப்படுத்துதல்' போன்றவற்றுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.எம்.பி., ஈஸ்வரசாமி பேசுகையில், “எல் அண்டு டி பை-பாஸ் சாலையை நான்கு அல்லது ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது; விரைவில் செய்து முடிக்கப்படும். மேற்கு மற்றும் கிழக்குப் புறவழிச்சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.விமான நிலைய விரிவாக்கப்பணிகள் துவங்கி விட்டன; விரைவில் நிறைவுபெறும். போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, மரப்பாலம் கட்டுமானப் பணிக்கு, விரைவில் ஒப்புதல் பெறப்படும்.பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, சேலம் அல்லது மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.நிகழ்ச்சியில், தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் வரதராஜன், நந்தகுமார், ஸ்ரீராமுலு, கோவை, பொள்ளாச்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.