நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிகள் பாதிப்பு
பொள்ளாச்சி; காலாண்டு தேர்வின் போது, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதால் பள்ளித் தலைமையாசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கியுள்ளது. இதற்காக, மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியும் நடத்தப்படுவதால், உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும், நடுவர்களாக செயல்பட அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளிகளில், மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இது குறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கடந்த மாதம், குறுமைய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கலைத்திருவிழாவும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, காலாண்டு தேர்வு துவங்கியுள்ள நிலையில் முதல்வர் கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர், பதிவு செய்தும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டி நடத்தும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குப்படுத்த முடிவதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.