மூங்கில் குட்டைக்கு குழாய் வழி; தண்ணீர் ஊராட்சி சார்பில் கோரிக்கை
மேட்டுப்பாளையம்; மழைக்காலத்திலும் தண்ணீர் இல்லாமல் இருக்கும், மொங்கம்பாளையம் மூங்கில் குட்டைக்கு, குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெள்ளாதி ஊராட்சியின் சார்பில்,வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், பெள்ளாதி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்திற்கு, ஏழு எருமை பள்ளம் வழியாக, தண்ணீர் வர வாய்க்கால் வசதி செய்யப்பட்டுள்ளது. மழை காலத்தில் இங்கு எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில், நீரூற்று அதிகளவில் கிடைத்து வருகின்றன. கிணற்று தண்ணீரை நம்பி, இப்பகுதி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இக்குளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட, மொங்கம்பாளையத்தில், 18 ஏக்கர் நிலப்பரப்பில் மூங்கில் குட்டை உள்ளது. இக்குட்டைக்கு தண்ணீர் வருவதற்கான போதிய வழிகள் இல்லை. அதனால் மழைக்காலத்திலும், குட்டையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்கும்.பெள்ளாதி குளம் நிறைந்து வழிந்து வெளியேறும் தண்ணீர், மூங்கில் குட்டைக்கு கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் கூறியதாவது: மழை காலத்தில் மூங்கில் குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும். குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும், ஏழு எருமை பள்ளத்தில் வரும் காட்டாறு வெள்ளத் தண்ணீரையும், குழாய் வழியாக மூங்கில் குட்டைக்கு கொண்டு சென்றால், ஆண்டு முழுவதும் குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே இரண்டு கிலோ மீட்டருக்கு, குழாய் அமைத்து தண்ணீரை கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.