- நிருபர் குழு -பிளஸ் 2 ஆங்கிலப்பாட பொதுத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்கள், உற்சாகத்துடன் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதினர். மொத்தம், 37 மையங்களில், 3,400 மாணவர்கள், 4,065 மாணவியர் என, 7,465 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 3,330 மாணவர்கள், 4,009 மாணவியர் என, 7,339 பேர் தேர்வெழுதினர். 70 மாணவர்கள், 56 மாணவியர் என, 126 பேர் தேர்வு 'ஆப்சென்ட்' ஆனார்கள்.தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வினோதிதா: ஆங்கிலப் பாடத்தில், அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்து, அடிக்கடி திருப்புதல் செய்து பயிற்சியில் ஈடுபட்டேன். அவ்வாறு இருந்தும், ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. பயிற்சி வினாக்களில் இருந்தும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. உட்புற வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் வாயிலாக போதிய பயிற்சி பெற்றிருந்ததால், 3 மதிப்பெண் வினாக்களுக்கு எளிமையாக பதில் எழுத முடிந்தது.தருணிகா: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. ஆசிரியர்கள் ஏராளமான பயிற்சி வினாக்கள் வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருந்தும், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் அனைவரும் திணறினோம். தமிழ் தேர்வு எழுதாக இருந்தது, ஆனால், ஆங்கிலத் தேர்வு ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி தனுஜா: ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. அதனால், யோசித்து அதற்குரிய பதிலை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், பிற வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது.சுனில்: ஆங்கில பாடப்புத்தகத்தில் உள் வினாக்களில் இ.ஆர்.சி., பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நான்-வெகாபலரி, நெடுவினா, குறுவினா பகுதிகள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆசிரியர்கள் வழங்கிய பயிற்சி தேர்வை பயமின்றி எதிர்கொள்ள வழிவகுத்தது.கோபிகா: இலக்கண பகுதிகள் மிகவும் எளிமையாக இருந்ததால், அதற்கான விடைகளை எளிதில் எழுத முடிந்தது. குறிப்பாக, சரியான நேரத்தில் அனைத்து வினாக்களையும் எழுதியுள்ளதால், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன். உடுமலை
பிளஸ் 2 ஆங்கிலப்பாட பொதுத்தேர்வு நேற்று நடந்தது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளத்தில் 18 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு குறித்து, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:ஹரிஹரன்: மொழிப்பாட தேர்வுகள் இரண்டுமே எளிமையாகவும், சுலபமாக விடை எழுதும் வகையிலும் இருந்தன. ஆங்கிலத்தேர்வில் வழக்கமாகவே ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருக்கும். இம்முறையும் மாணவர்கள் புரிந்துகொண்டு விடை அளிக்கும் வகையில்தான் இருந்தது.அப்துல்கலாம்: ஆங்கிலப்பாடத்தேர்வு எதிர்பார்த்ததை போல் சுலபமாக இருந்தது. இதற்கு முன் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்தான் அதிகம் வந்ததால், தடையில்லாமல் விடை எழுதினோம்.முத்துமாணிக்கம்: அனைத்து மாணவர்களும் சுலபமாக விடை எழுதுவதற்கான வினாத்தாளாக இருந்தது. ஆங்கில தேர்வில் எளிமையாக சதம் எடுக்கலாம். ஒரு மதிப்பெண் வினாக்கள் வழக்கம்போல் சிறிது யோசித்து விடை எழுதும் வகையில் இருந்தது.சுபியான்கான்: அடுத்து வரும் தேர்வுகளும், ஆங்கில தேர்வை போல் எளிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மதிப்பெண் பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தால் சிறிது குழப்பமாக இருந்தது.தரணீஸ்: தமிழ் மொழிப்பாடத் தேர்வு ஓரளவு எளிமையாக இருந்தது. ஆனால் ஆங்கிலத்தேர்வு மிகவும் எளிமையாகவே இருந்தது. விடைகளை விரைவாக எழுத முடிந்தது.