லஞ்சம் வாங்கிய வன காவலர்கள் வளைத்து பிடித்தனர் போலீசார்
பெ.நா.பாளையம்:சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்கிய மூன்று வன காவலர்களை, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஆனைகட்டி ரோட்டில் தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டியில் வனத்துறை சோதனை சாவடிகளில் பணியாற்றும் சில வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோவை, மதுக்கரை, குரும்பபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 48, டிப்பர் லாரியில் மாட்டு சாணம் எடுத்து சென்றபோது, மாங்கரை, ஆனைகட்டியில் சோதனை சாவடியில் வனக்காவலர்கள் லஞ்சம் கேட்டனர். தர விரும்பாத அவர், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை, 6:00 மணிக்கு டிப்பர் லாரியுடன் மாங்கரை செக்போஸ்ட் வந்தார். ரசாயனம் தடவிய 1,000 ரூபாயை கொடுத்த போது, அதை வாங்கிய வனக்காவலர் செல்வகுமார், 35, என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் ஆனைகட்டியில் உள்ள சோதனை சாவடிக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றார். அவரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காவலர் சதீஷ்குமார் 35, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வன காவலர் சுப்பிரமணியம், 55, என்பவரும் லஞ்சம் கேட்டதால், அவரையும் போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணியம் மீது கடந்த வாரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.