தடாகம் தோட்டங்களில் போலீசார் சிறப்பு ஆய்வு
பெ.நா.பாளையம்; தடாகம் வட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் வசிப்பவர்கள் குறித்து, போலீசார் சிறப்பு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தோட்டங்களில் தனியாக வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதிகளை கொலை செய்யும் சம்பவங்கள் நடந்ததால், தமிழகம் முழுவதும் தோட்டங்களில் தனியாக வசிக்கும் நபர்கள் குறித்து, ஆய்வு நடத்தி அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவும், அவர்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.துடியலுார் அருகே தடாகம் போலீசுக்கு உட்பட்ட எண். 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளான மடத்துார், பாப்பநாயக்கன்பாளையம், காளையனுார், கணுவாய், ஆனைகட்டி, வீரபாண்டி புதுார், வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் வசிக்கும் நபர்களை தடாகம் போலீசார் நேரில் சந்தித்து, ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.இது குறித்து தடாகம் போலீசார் கூறுகையில், 'தோட்டங்களில் வசிக்கும் நபர்களை சந்தித்து, அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா உள்ளதா, வசிக்கும் நபர்கள் தனியாக இருக்கிறார்களா? உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி வந்து செல்கிறார்களா உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறோம். 'சிசிடிவி' இல்லாத தோட்டங்களில், 'சிசிடிவி' அமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 'சிசிடிவி' அமைக்கப்பட்டிருந்தால், அதை தடாகம் போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, 'காவல் உதவி செயலி' மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அதை ஆபத்து காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தான மாதிரி செயல்முறையும் அவர்களுக்கு செய்து காட்டப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தான துண்டு பிரசுரங்கள் தோட்டங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டன,' என்றனர்.