கோவை மாநகரில் தனிமையில் உள்ள 627 முதியவர்களுக்கு போலீசார் உதவி
கோவை : கோவை மாநகரில் தனிமையில் உள்ள, 627 முதியவர்களுக்கு போலீசார் நேரில் சென்று உதவி செய்து வருகின்றனர்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தனிமையில் வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வசித்து வரும் முதியவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாயிலாக மாநகரில் உள்ள, 4 மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, 24 போலீஸ் ஸ்டேஷன்களிலும், இதற்கென தனி போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ரோந்து சென்று முதியவர்களின் விவரங்களை சேகரித்தனர். தேவையான உதவிகளை கேட்டு தெரிந்து, செய்து வந்தனர்.அதன்படி, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லாமல், 20 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 938 முதியவர்களை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்களில், 627 முதியவர்களை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை செய்துள்ளனர்.மேலும் 616 முதியவர்களுக்கு, அவர்களது மொபைல் போனில் 'காவலன் ஆப்' பதிவிறக்கம் செய்து கொடுத்து, ஆபத்து நேரங்களில் அதனை எப்படி பயன்படுத்துவது என பயிற்சி வழங்கி உள்ளனர். இதனை போலீஸ் கமிஷனர், மாதம் தோறும் ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.