உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கல்லுாரி மாணவி தற்கொலை

பொள்ளாச்சி அருகே, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., ஐ.டி., முதலாமாண்டு படித்து வந்தார். அவர், தோழிகள் மொபைல்போன் வைத்திருப்பதாகவும், தனக்கும் புதிய மொபைல்போன் வாங்கி தருமாறு கடந்த ஒரு மாதமாக பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால், மாணவிக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கல்லுாரிக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது. கடந்த, மூன்று நாட்களாக கல்லுாரி செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விபத்தில் ஒருவர் பலி

ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்,48, மணிமாறன்,53, தர்மராஜ்,48 மற்றும் நான்கு வயது சிறுவன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு ஆனைமலை ரோட்டில் காரில் சென்றனர். காரை ஓட்டிய சுபாஷ் சந்திரபோஸ், ஆனைமலை அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலைத்துறை கட்டடம் அருகே சுற்றுச்சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோழி திருடியவர் கைது

பொள்ளாச்சி அருகே, பூவலப்பருத்தியை சேர்ந்த விவசாயி பிரபாகரன்,39, ஐந்து ஏக்கர் நிலத்தில் 150 கோழி மற்றும் சேவல்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தோட்டத்தில் வளர்த்த கோழிகளும், சேவல்களும் திருடு போயின. நேற்று காலை வீட்டுக்கு சென்று விட்டு, தோட்டத்துக்கு சென்ற போது பூவலப்பருத்தியை சேர்ந்த கார்த்திக்கேயன்,37, இரண்டு சேவல்களை திருடுவதை கண்டு சப்தம் போட்டார். பிரபாகரனை கண்டதும் அவர் இரண்டு சேவல்களை எடுத்துக்கொண்டு ஓடிய போது, விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆழியாறு போலீசார், கார்த்திக்கேயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மது விற்ற இருவர் கைது

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், சொக்கனூர் ரோட்டில் சிங்கையன்புதூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே, புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல்குமார், 25, என்பவரிடமிருந்து, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடபுதூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே, மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார், 30, என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி