உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டங்களில் கொள்ளையை தடுக்க போலீசார் நடவடிக்கை; சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் தீவிரம்

தோட்டங்களில் கொள்ளையை தடுக்க போலீசார் நடவடிக்கை; சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் தீவிரம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தோட்டப்பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க, போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பண்ணை வீடுகளில் வசிக்கும் முதியோர்களை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களால், தோட்டப்பகுதிகளில் வசிக்கும் வயதான தம்பதியினர் அச்சமடைந்துள்ளனர்.இதை தடுக்க, கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளை தேர்வு செய்து, காத்திருக்கும் கொள்ளையர்கள், சரியான நேரத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை நடந்த இரண்டு சம்பவங்களில் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க, போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செல்வபுரம், திருமலை நாயக்கன்பாளையம், சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், வெள்ளமடை, நாயக்கனூர், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 45 தோட்டப்பகுதிகள் உள்ளன. இதில், பெரும்பாலும் வயதான தம்பதியினர் வசிக்கின்றனர். இவர்களை சந்தித்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில்,' தோட்டப்பகுதிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டுமென கூறியுள்ளோம். மேலும், திறமையான நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். முன்பக்க மற்றும் பின்பக்க உறுதியான கதவுகள் பொருத்த வேண்டும்.இரவு நேரங்களில் கதவை தட்டினால், உறவினரா, நண்பரா என, உறுதிப்படுத்தாமல் திறக்க கூடாது. அவ்வாறு தட்டும் போது சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக 'காவல் உதவி செயலி' சிகப்பு பொத்தானை அழுத்த வேண்டும். நகை, பணம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. அவற்றை வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் மின்விளக்கு எரிவதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றனர்.

போலீஸ் ஸ்டேஷனுடன் இணைப்பு

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 45 தோட்ட பகுதிகளில், 30 தோட்டப்பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள டி.வி.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்டப்பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், கொள்ளையர்கள் அங்குள்ள டி.வி.ஆர்., அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றாலும், கேமராவை உடைத்தாலும், அது குறித்தான பதிவுகள் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள டி.பி.ஆரில்., தானாக பதிவாகி விடும், என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை