உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியாக வசிக்கும் நபர்களின் வீடுகளை கண்காணிக்கும் போலீசார்; இரவு வாகன சோதனையும் தீவிரம்

தனியாக வசிக்கும் நபர்களின் வீடுகளை கண்காணிக்கும் போலீசார்; இரவு வாகன சோதனையும் தீவிரம்

பெ.நா.பாளையம்; திருப்பூர் கொலை மற்றும் பொள்ளாச்சி திருட்டு சம்பவங்களை தொடர்ந்து, தனியாக வசிக்கும் நபர்களின் வீடுகளையும், இரவு நேரத்தில் வாகன சோதனையையும், கோவை மாவட்ட புறநகர் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.திருப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதி மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதே போல கடந்த வாரம், பொள்ளாச்சியில் பூட்டி இருந்த டாக்டருடைய வீட்டில் இருந்து, 136 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியன திருட்டுப் போயின.சம்பவங்களை தொடர்ந்து கோவை புறநகர் போலீசார் இரவு நேரங்களில், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். தோட்டப்பகுதிகளில் தனியாக வசிப்பவர்கள், குடியிருப்பில் வயதாகி தனியாக இருப்பவர்கள், ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே வசிப்பவர்கள் என கண்டறிந்து, அப்பகுதியில் ரோந்து பணியை போலீசார் அதிகரித்துள்ளனர்.இரவு நேரத்தில் புறநகர் பகுதிகளில், குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி, சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள், தீவிர விசாரணைக்கு பின்னரே விடுவிக்கப்படுகின்றனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:'வீட்டில் கூடுமானவரை, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது நல்லது. அதை மொபைல் போனுடன் இணைத்து, வீட்டில் சந்தேகப்படும்படியான ஆட்களை நடமாட்டம் இருந்தால், உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கும் வகையிலான அமைப்பு முறையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வீட்டை விட்டு செல்லும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, பதிவேட்டில் பதிவு செய்து செல்ல வேண்டும். கூடுமானவரை வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வங்கி லாக்கர்களில், பாதுகாப்பாக வைக்கலாம். வீட்டில் தனியாக வசிப்பவர்கள் தங்களுடைய மொபைல் போனில், வீட்டுக்கு அருகே வசிப்பவர்கள் மற்றும் அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்து, அதை பயன்படுத்தும் வழிமுறையையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.பெண்கள், வயதானவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் செல்லும்போது அல்லது வாக்கிங் செல்லும் போது, கழுத்தில் தங்க செயின், விலை உயர்ந்த தங்க நகைகளை அணிந்து செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வீடு தேடி விற்பனை செய்யும் பொருட்களை கொண்டு வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, சந்தேகத்திற்குரிய நபர்கள் பக்கத்தில் இருந்தால், காவல்துறை அல்லது வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை சுற்றியுள்ள மின்விளக்குகளை எரிய விட வேண்டும். திருட்டு நடப்பதை தடுக்க மற்றும் முயற்சி செய்வதை தடுக்க வீட்டின் கதவுகளில் அலாரம் பொருத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி