கோவை ; கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரூ. 20 கோடிக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், மாநகரில் 65 ஹாட்ஸ்பாட்கள் கண்டறிந்து அங்கு போலீசார் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகரில் அத்திபாளையம் பிரிவு, காந்திபுரம், டவுன்ஹால், காமராஜபுரம் மற்றும் ஹோப் காலேஜ் ஆகிய ஐந்து இடங்களில் ஐ.டி.எம்.எஸ்., (நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு) கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபடும் போலீசாரும், விதிமீறும் வாகனங்களை தங்களின் மொபைல் போனில் (போலீஸ் இ-ஐ) படமெடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் போலீசார் பிடித்து, அபராதத்தை அப்போதே வசூலித்தனர். தற்போது, ஐ.டி.எம்.எஸ்., மற்றும் போலீஸ் இ ஐ வாயிலாக வழக்கு பதிவு செய்தால் அபராதத்தை இணைய வழியில் செலுத்தும் வகையில், 'இ சலான்' முறை வந்துவிட்டது.இதனால் பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். அபராதம் செலுத்தாமல் இருந்தால் வாகனத்தை விற்பனை செய்யவோ, பெயர் மாற்றவோ முடியாது. அந்த சமயங்களில் மட்டுமே கட்டாயத்தின் பேரில் சிலர் அபராதத்தை செலுத்துகின்றனர். அபராத தொகையை வசூல் செய்ய போலீசார் 'டெலிவாய்ஸ்' அழைத்து எச்சரிக்கின்றனர்.இந்தாண்டு, ஜன., 1ம் தேதி முதல் நவ., 14ம் தேதி தேதி வரை கோவை மாநகர் பகுதியில் மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 935 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ. 26 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 180 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, ரூ. 6 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 980 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 20 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 200 நிலுவையில் உள்ளது.கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் கூறுகையில், ''அபராதங்களை கட்டாமல் இருப்பவர்களிடம் இருந்து வசூல் செய்வதற்காக 'டெலிவாய்ஸ்' அனுப்பப்படுகிறது. இதன் மூலம், வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு 'தானியங்கி குரல்' மூலம் அபராதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இணைய வழியில் கட்ட வலியுறுத்தப்படுகிறது. மேலும் கட்டாமல் இருப்பவர்கள் வாகனங்கள் தணிக்கையின் போது பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு முறை தொடர் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மும்மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, நோ பார்க்கிங் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம் முறை ஈடுபட்டால், ரூ. 1,500 அபராதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையான விதிமீறல்களுக்கும் இது மாறுபடும். மேலும் அபராதம் வசூல் செய்ய தேவையான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார்.
அபராதம் செலுத்தாத 1043 வாகனங்கள் பறிமுதல்
கோவை மாநரில் இந்தாண்டு ஜன., முதல் தற்போது வரை முதல் முறை விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தமால் மீண்டும் விதிமீறலில் ஈடுபட்ட 1043 வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ரூ. 11 லட்சத்து 43 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபாரதம் செலுத்திய 1008 வாகனங்கள் மட்டுமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.