மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழாவை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. புதுப் பானையில் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் முத்துலட்சுமி விழாவுக்கு தலைமை வகித்தார். பொங்கல் விழாவின் சிறப்பை எடுத்து கூறும் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் நடந்தன. சிறப்பு பட்டிமன்றம் பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாகேஸ்வரி, பூங்கொடி, ரெஜி ஆகியோர் செய்து இருந்தனர்.பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தமிழாசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். விழாவில், இறைவனுக்கு பொங்கல் வைத்தல், கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு செல்லுதல், கணபதி வழிபாடு, கோமாதா வழிபாடு, பஞ்சபூத வழிபாடு, குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்வுகள், ஜமாப் இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பிரீத்தா பிரியதர்ஷினி தலைமை வகித்தார். விழாவில், தலைமை ஆசிரியர் ரமேஷ், பள்ளி கல்வி இயக்குனர் குணசேகரன், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள நாயர் கல்வி நிறுவன வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. நாயர் கல்வி நிறுவன இயக்குனர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்வியியல் கல்லூரியை சேர்ந்த மகேந்திரன் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் யமுனா, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். விழாவை ஒட்டி உரியடித்தல், சிலம்பம், ஆடல் பாடல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மத்தம்பாளையத்தில் உள்ள அக்சரம் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி நமது பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் பள்ளியின் தாளாளர் சிவகுமார், செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி முதல்வர் உமா தலைமையில் நடந்தது. மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வருகை புரிந்தனர். விழாவை ஒட்டி அம்மி அணைத்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, சிலம்பம் மற்றும் வாள்வீச்சு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கட்டடவியல் துறை தலைவர் நிவேதிதா செய்து இருந்தார்.
13-Jan-2025