| ADDED : டிச 27, 2025 05:06 AM
ரா ஜ வீதியில் மேற்கு கோடியில், இரண்டு தெப்பக் குளங்கள் இருந்தன. ஒன்றை கோபால சுவாமி கோயில் தெப்பக்குளம் என்றும், மற்றொன்றை, வீதி தெப்பக்குளம் என்றும் அழைத்தனர். கோபால சுவாமி தெப்பக்குளத்தில் மாசி மாதத்தில் நடக்கும் கோணியம்மன் கோயில் தெப்போற்சவம், அந்தப் பகுதியின் ஆன்மிக மரபை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அருகிலுள்ள பெருமாள் கோயிலில் ராமர் சந்நிதியை 1926ம் ஆண்டு கிரிய செட்டியார் கட்டினார். அனுமந்தராயன் கோயிலுக்கு அடுத்ததாக இருந்த, வீதி தெப்பக்குளம் பின்னால் பரந்து விரிந்த தோப்பு இருந்தது. அதன் அருகில் இருந்தது அனந்தையன் கிணறு. சிறுவாணி திட்டத்துக்கு முன், இந்த கிணற்றின் நீரே நகரத்தின் தாகத்தைத் தீர்த்தது என்பது பலருக்கு தெரியாத உண்மை. கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோவிடம், கோவிந்த ராவ் என்பவர் உயர் அதிகாரியாக பணியாற்றினார். நில தீர்வை வசூலிப்பதில் அபார திறமை காட்டியதால், ஆங்கிலேய அதிகாரிகளின் மதிப்பை பெற்றார். ஓய்வு பெற்ற பின்னரும் ஓயாது பணியாற்றிய அவரது நேர்மையும் உழைப்பும், தாமஸ் மன்றோவை ஈர்த்தது. அதனால், தன் தோட்டத்தையும் குளத்தையும் கோவிந்த ராவுக்கு பரிசாக வழங்கினார். வயது நிரம்பிய காலத்தில் துயரமின்றி சுகஜீவியாக இருப்பீர்; நீர் கும்பினிக்கு நன்றியுள்ள வேலையாளராக இருந்ததை அறிவேன்' என்ற அவரது வாழ்த்து ராவின் பண்பையும் மன்றோவின் நன்றியையும் வெளிப்படுத்துகிறது. தோட்டத்தின் முன்புறம் உள்ள, ஹனுமந்தராயன் கோயில் கூட கோவிந்த ராவே கட்டியதாக வரலாறு சொல்கிறது. இவ்வாறு, ராஜ வீதியின் தெப்பக்குளங்களும் தோட்டங்களும், கோவையின் ஆன்மிகம், குடிநீர் வரலாறு, ஆங்கிலேயர் கால நிர்வாகம் ஆகிய அனைத்தையும் சொல்லும் வரலாற்று சாட்சிகளாக நிற்கின்றன.