உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் பட்டியல் பணிக்கு அழுத்தம்; ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அதிருப்தி

 வாக்காளர் பட்டியல் பணிக்கு அழுத்தம்; ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அதிருப்தி

கோவை: கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. 32.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3,117 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வினியோகித்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணி வரை, 20.89 லட்சம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணியும் துவக்கப்பட்டிருக்கிறது. இப்பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் பிரிவினர் அழுத்தம் கொடுத்து வருவதால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ஓட்டுச்சாவடிக்குரிய படிவங்கள் முழுமையாக வந்து மூன்று நாட்களாகி விட்டன. செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பயிற்சியில் சொன்னபோது, 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டது. அச்செயலி 'அப்டேட்' செய்யப்பட்டிருக்கிறது. புதிய போட்டோ இணைத்திருந்தால், ஸ்கேன் செய்ய வேண்டும். படிவத்தை போட்டோ எடுத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வீட்டுக்கு மூன்று முறை செல்ல வேண்டும். சிலருக்கு சொந்த வீடாக இருக்கிறது; அங்கு வசிக்கின்றனர். அதே முகவரியில் அடையாள அட்டை இருக்கிறது. தற்சமயம் அந்த வீட்டில் வசிக்காமல் வெளிநாடு அல்லது வெளியூர் சென்றிருப்பதாக கூறுகின்றனர். அத்தகைய வாக்காளர்களுக்கான படிவங்களை என்ன செய்வதென தெரியவில்லை. படிவத்தில், 2002/ 2005 பட்டியலில் உள்ள தகவல்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யாமல் கொடுத்தால், வரைவு பட்டியலில் பெயர் இடம் பெறாது. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், தகுந்த ஆவணங்கள் சமர்ப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி பட்டியலில் சேர்க்க அறிவுறுத்துகின்றனர். சில வாக்காளர்களின் தந்தை, தாய் பெயர், 2002/ 2005 பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால், அவர்களது தந்தை (தாத்தா) பெயர் இருக்கிறதா என பார்க்க வேண்டும். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையே இருக்காது. இவர்கள் வாக்காளர்களாகவே இருப்பினும் வரைவு பட்டியலில் சேர்க்க முடியாது; தங்களது ஆவணங்களை மேல்முறையீடு காலத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே இணைக்க முடியும் என கூறுவதால், மக்களிடம் சங்கடம் ஏற்படுகிறது. படிவங்களை வினியோகிக்க ஒருமுறை, அவற்றை பெறுவதற்கு ஒருமுறை என, காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல வேண்டியுள்ளது. அதன்பின், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், அனைவரிடம் தொகுதி வாரியாக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். பணி முன்னேற்றம் 65 சதவீதத்தை கடந்தும் கூட, இன்னும் வேகமாக செயல்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றனர். அதனால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு வருவதை சிலர் தவிர்க்கின்றனர். மருத்துவ விடுப்பு எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் பிரிவினர் 'மெமோ' கொடுப்பதால், அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை