பிரதமர் பயிர் காப்பீடு திட்டம்; நெல்லுக்கு நாளை கடைசி நாள்
கோவை; கோவை மாவட்டத்தில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காரீப் பருவ பயிர் காப்பீடு செய்ய, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு நாளை கடைசி நாள் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. காரீப் பருவத்தில், நெல் பயிருக்கு ரூ. 770 காப்பீடு சந்தா. உளுந்து, பச்சைப்பயறு பயிர்களுக்கு ரூ.340. இவற்றுக்கு நாளையுடன் அவகாசம் முடிவடைகிறது.மக்காச்சோளம் ரூ.726, சோளம் ரூ. 241, கொள்ளு ரூ. 216. இப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வரும் செப்., 16. சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டையுடன், இ- சேவை மையம் வாயிலாக காப்பீடு செய்யலாம்.வங்கிக் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும், இ-- சேவை மையங்கள் வாயிலாகவும் விருப்பத்தின் பேரில், பதிவு செய்து கொள்ளலாம். காப்பீட்டுத் தொகை செலுத்திய பின், ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.