பிரதமரின் சுற்றுப்பயணம் வர்த்தக உறவை மேம்படுத்தும்
கோவை; இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான 'பியோ' தலைவர் ரால்ஹான் அறிக்கை: இங்கிலாந்து உடனான, தாராள வர்த்தக ஒப்பந்தப் பேச்சு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. வரும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய உதவும் என நம்புகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஜவுளி, தோல், ரத்தினங்கள், ஆடைகள், நகைகள், மருந்துகள், கடல் மற்றும் பொறியியல் பொருட்கள் வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும். ஜவுளித்துறை மீதான வரி நீக்கப்பட்டால், இங்கிலாந்து சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மை அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பம், வணிக சேவைகள் மற்றும் தொழில்முறை சேவை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாலத்தீவுகளுக்கான பிரதமரின் பயணத்தால், சுற்றுலா, மீன்வளம், கடல்சார் பாதுகாப்பு, பரஸ்பர வளர்ச்சி ஏற்படுவதுடன், பிராந்திய ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்படும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, சுற்றுலா தொடர்பான மற்றும் நிலையான வளர்ச்சித் துறைகளில், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.