பாடப்புத்தகம், சீருடை வழங்க தலைமையாசிரியர்கள் ஆயத்தம்
பொள்ளாச்சி: தொடக்கக்கல்வி வாயிலாக, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் உள்ள, 530 பள்ளிகளில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.தொடக்கக்கல்வியில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு என, ஏழு ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, 425 தொடக்க பள்ளிகள், 105 நடுநிலை பள்ளிகள் செயல்படுகின்றன.இப்பள்ளி மாணவர்களுக்கு, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக, அந்தந்த வட்டார கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஜூன் 2ல், பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினமே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, பேக் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:--தொடக்கக்கல்வி துறையில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, பள்ளி திறப்பதற்கு முன்பே, சீருடை, பேக் உள்ளிட்டவைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதேபோல, பாடபுத்தகங்கள், நோட்டுகளும் முன்னரே தருவிக்கப்பட்டுள்ளன. தற்போது, பள்ளிகள் தோறும், அந்தந்த உள்ளாட்சி துாய்மை பணியாளர்களை கொண்டு, வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் வளாகம் சுத்தம் செய்து தயார் நிலையில் உள்ளன. பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு, அனைத்து உதவி திட்டங்களும் வழங்கப்படும்.இவ்வாறு, கூறினர்.