உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புளுடூத் இணைப்பில் போன் பேச்சு; தனியார் பஸ் டிரைவர்கள் அத்துமீறல்

புளுடூத் இணைப்பில் போன் பேச்சு; தனியார் பஸ் டிரைவர்கள் அத்துமீறல்

பொள்ளச்சி; புளுடூத் மற்றும் இயர்பட்ஸ் இணைப்பில் மொபைல்போன் பேசியவாறு, தனியார் பஸ்சை இயக்கும் டிரைவர்களால், பயணியர் அச்சமடைகின்றனர். அரசு பஸ் டிரைவர்கள், பணியின் போது மொபைல்போன் பயன்படுத்தினால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர், என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதை கண்காணிக்க, ஒவ்வொரு மண்டலத்திலும், ஏழு முதல், 12 பேர் வரையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பஸ்கள், பணியின் போது ஊழியர்கள் மொபைல்போனை பயன்படுத்துவது கிடையாது. ஆனால், பொள்ளாாச்சி நகர் மார்க்கமாக இயக்கப்படும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர், அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். புளுடூத், இயர்பட்ஸ் பயன்படுத்தி மொபைல்போன் பேசியவாறு பஸ்களை இயக்குகின்றனர். பயணியர் கூறியதாவது: பொள்ளாச்சி நகரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கையில் மொபைல்போன் பிடித்தவாறு பேசினால், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், சிலர் ஒரு காதில் புளுடூத் மற்றும் இயர்பட்ஸ் பயன்படுத்துகின்றனர். இதை பயணியரும் அறிய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், பஸ்களில் சப்தமாக பாடல்கள் ஒலிக்க செய்கின்றனர். போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது, ஆய்வு நடத்தி அத்துமீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ