சர்வதேச புகைப்படப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கோவை; கோவையில், சர்வதேச புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எல்.எம்.டபிள்யூ., லிட்., சார்பில், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெயவர்த்தனவேலு நினைவாக, டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தற்போது 14வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது. 'வைல்ட் போட்ரைட்' மற்றும் 'நேச்சர்ஸ்கேப்ஸ்' எனும் இரு தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. 32 நாடுகளை சேர்ந்த 2,292 பேரிடம் இருந்து 8,925 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இப்புகைப்படங்களை, புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்களான, இலங்கையை சேர்ந்த லக் ஷிதா கருணாரத்ன, நம் நாட்டை சேர்ந்த சிவாங் மேத்தா மற்றும் சவுராப் தேசாய் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மதிப்பீடு செய்தனர். போட்டிக்கான வழிகாட்டியாக மருதாச்சலம், போட்டியின் நிர்வாகியாக விக்ரம் சத்தியநாதன் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியின் விருது வழங்கும் விழா, நேற்று, கோவை -அவிநாசி சாலையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலையரங்கில் நடத்தப்பட்டது. ' நேச்சர்ஸ்கேப்ஸ்' தலைப்பில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அர்னாட் பாரே முதல் பரிசையும், துபாயை சேர்ந்த திலீப் இரண்டாம் பரிசையும் வென்றனர். 'வைல்ட் போட்ரைட்' தலைப்பில், கேரளாவை சேர்ந்த சந்தீப் தாஸ் முதலிடத்தையும், மத்தியப் பிரதேசம் போபாலை சேர்ந்த காசிம் முகமது, இரண்டாம் பரிசையும் வென்றனர். இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு, பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, எல்.எம்.டபிள்யு., நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ரூ.10 லட்சத்துக் கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சிறந்த புகைப்படங்கள், பொதுமக்கள் பார்வைக்காக, ஆக., 5ம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படுகிறது.