எச்சரிக்கை அறிவிப்பின்றி கட்டுமானத்தால் சிக்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, நாட்டுக்கல்பாளையம் -- பழையூர் செல்லும் ரோட்டில், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இன்றி, பாலம் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது.பொள்ளாச்சி அருகே, நாட்டுக்கல்பாளையம் -- பழையூர் செல்லும் ரோட்டில், பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு, வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்கவில்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.மக்கள் கூறுகையில், 'சாலை விரிவாக்கம், பாலங்கள் அமைக்கும் போது, ஆட்கள் வேலை செய்கிறார்கள், என, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஆனால், குறுகலான சாலையில் பாலம் அமைக்கும் பணி மேற்கொண்டும், எவ்வித எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவில்லை.போதிய அறிவிப்பு பலகை இல்லாமல், குறுகிய பகுதியாக இருப்பதால், வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்து, பணி மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.