கல்லுாரி விடுதிகளின் தரம் ஆய்வு நடத்த பேராசிரியர்கள் நியமனம்
கோவை; கல்லுாரி மாணவர்கள் விடுதிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க இரு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. நெடுந்துாரத்தில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி பயில கல்லுாரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, அரசு, தனியார் விடுதிகளும் செயல்படுகின்றன.கல்லுாரிகளில் செயல்படும் விடுதிகள் பராமரிப்பு, உணவு குறித்து மாணவர்கள் சார்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவை மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் கலைசெல்வி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் வளாகங்கள், விடுதி கட்டடங்கள், கழிப்பறைகள், சுகாதாரமான உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.இதுதவிர, கல்லுாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகள், அரசு விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பேராசிரியர்கள் கொண்ட ஆய்வுக்குழுவை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. குழுவினர் விடுதிகளை ஆய்வு செய்வதுடன், மாணவர்களின் குறைகளையும் கேட்டறிய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லுாரி விடுதிகளில் ஆய்வு நடத்த இரு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஆய்வை துவங்கி உள்ளனர்.