சுண்டக்காமுத்துார் குளத்தில் தண்ணீர் தேக்க ரூ.2.41 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிப்பு
கோவை; கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஒன்பது குளங்கள் உள்ளன. அதில், ஏழு குளங்களின் கரைகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன. குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, மேலும் ஐந்து இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு, 50 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதேபோல், நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, முதல்கட்டமாக, 3 இடங்களில் கால்வாயுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட, அரசிடம் இருந்து, 30 கோடி ரூபாய் பெறவும், அடுத்த கட்டமாக, எட்டு இடங்களில் ரூ.50 கோடியில் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.குனியமுத்துார் செங்குளத்துக்கு தண்ணீர் செல்லும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் அருகே உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நீர் சேமிப்பு கிணறு அமைத்து, குழாய் அமைத்து, மின் மோட்டார் மூலமாக சுண்டக்காமுத்துார் குளத்தில் தண்ணீர் நிரப்ப, ரூ.2.41 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.சிங்காநல்லுார் குளத்தில், 3,200 மீட்டர் நீளத்துக்கு நடைபயிற்சி பாதை அமைத்தல், குளத்தை சுற்றிலும் சைக்கிள் பாதை, குளத்தின் அழகை ரசிக்க மர வீடு, திறந்தவெளி அரங்கம், படகு சவாரிக்கான தளம், சிறுவர் விளையாட்டு பூங்கா உருவாக்க ரூ.13 கோடிக்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்துள்ளது.கருப்பராயன் பாளையம் குளம் மற்றும் காளப்பட்டி குட்டையை ரூ.6.50 கோடியில் மேம்படுத்தப்படும். 38வது வார்டு சுப்ரமணிய நகரில் உள்ள இத்லாம்பாளையம் குட்டையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 9வது வார்டில் உள்ள சித்ரா நகர் குட்டையை சீரமைத்து, சுத்திகரிப்பு நிலையம் கட்டி, சின்னவேடம்பட்டி முதல் சித்ரா நகர் வரையுள்ள கழிவு நீரை சுத்திகரித்து இக்குட்டையில் தேக்கப்படும்.மழைக்காலங்களில் செங்குளம் நிரம்பும்போது கசிவு ஏற்படுகிறது. அதை தவிர்க்க, வெற்றித்திருநகர் முதல் செங்குளம் வரை ஜெ.ஜெ., நகர் பிரதான சாலையிலும், ஹீரா கார்டன் முதல் கருப்பண்ண தோட்டம் வரை சுண்டக்காமுத்துார் பிரதான சாலையிலும் மழை நீர் வடிகால் கட்ட ரூ.1.45 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.திருச்சி ரோட்டில் பெர்க்ஸ் நுழைவாயில் அருகே, சங்கனுார் பள்ளத்தின் ஓடை வருகிறது. சிங்காநல்லுார் குளத்துக்கு தண்ணீர் செல்ல வேண்டும். கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, மதகுகள் மூடிக்கொள்கின்றன.குடியிருப்புகளுக்குள் மழைநீர் சென்று விடுகிறது. அதனால், தானியங்கி முறையில் இயங்கும் மதகுகள் அமைக்க ஒரு கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியிருக்கிறது.