மேலும் செய்திகள்
பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு
04-Oct-2025
கோவை: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களில் 2.40 லட்சம் மரக்கன்றுகளை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவன வளாகங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சியில் உள்ள நர்சரி பண்ணையில் வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி ஆகிய செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியங்களில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நாற்றங்கால் பண்ணை என்பது நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவுக்குத் தயார் செய்யும் இடம். இப்பண்ணைகளில், நாற்றுகளை சரியான முறையில் பராமரிப்பதால், அவை ஆரோக்கியமாக வளர்கின்றன. இயற்கையான சூழலை பேணி, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடிகிறது. ஊரக வளர்ச்சித்துறை மூலம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள, 12 தாலுகாக்களில் இரு மாதங்களுக்கு தாலுகாவுக்கு மாதம் தலா, 10,000 நாற்றுகள் வீதம் உற்பத்தி செய்ய, கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, 24 நர்சரிகளில் 10,000 நாற்றுகள் வீதம், 2.40 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள், 6 அடி உயரம் வளர்ந்த பின், 2026--27-ம் ஆண்டில் சாலையோரம், ஆற்றங்கரையோரம், அரசு அலுவலகங்கள், கனவு இல்ல வீடுகள், கல்வி நிறுவனங்களில் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
04-Oct-2025