உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடுகபாளையம் ரயில்வே கேட் மூடுவதற்கு எதிர்ப்பு; தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் மறியல்

வடுகபாளையம் ரயில்வே கேட் மூடுவதற்கு எதிர்ப்பு; தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் மறியல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வடுகபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி, எம்.எல்.ஏ., தலைமையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி, வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளாக ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதி மக்கள், இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோவை ரோட்டில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், பாலக்காடு ரோடு செல்வோரும் இந்த வழித்தடத்தில் செல்வது வழக்கம்.பள்ளி, கல்லுாரி மணவர்கள், மாற்றுத்திறனாளிகள், துாய்மை பணியாளர்கள் என பலரும் இவ்வழியாகத்தான் சென்று வந்தனர். இந்த ரயில்வே கேட் மூடப்படுவதாக தகவல் பரவியதையடுத்து கடந்தாண்டு ரயில்வே அதிகாரிகளிடம் அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் மனு கொடுத்து ரயில்வே கேட் மூட வேண்டாம் என வலியுறுத்தினர்.இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் வடுகபாளையம் ரயில்வே கேட் (எல்சி 123) மூடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சப் - கலெக்டர், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும், ரயில்வே கேட் திறக்க வலியுறுத்தினர்.மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கடந்த ஆக., மாதம் மீண்டும் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.இந்நிலையில், அந்த ரயில்வே கேட் மீண்டும் மூடப்படுவதாக தகவல் பரவியதையடுத்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள், ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், தாசில்தார் மேரி வினிதா மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அப்போது, எம்.எல்.ஏ., பேசுகையில், ''வடுகபாளையம் ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். பொள்ளாச்சி நகரத்துக்கு சென்று வர இந்த ஒரு வழித்தடம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.இவ்வழித்தடம் வழியாக, '108' ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள், 10 நிமிடங்களில் தேவையான மருத்துவமனைக்கு செல்ல முடியும். மேலும், பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் மினி பஸ்களும் இவ்வழியாக செல்கிறது.ரயில்வே கேட் மறுபுறம் உள்ளவர்களுக்கு வடுகபாளையத்தில் தான் பொதுக்கழிப்பிட வசதி உள்ளது. அவர்கள், இந்த கேட்டை கடந்து தான் வர வேண்டும். இதுவரை இந்த ரயில்வே கேட்டில் எந்த விபத்தும் பதிவானதில்லை.இந்த ரயில்வே கேட்டை அடைப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுவர். தற்போது, அரை கி.மீ., துாரத்தில் உள்ள 'சப்வே' வழியாக செல்ல வேண்டும் என்பதால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ரயில்வே கேட்டை மூடக்கூடாது,'' என்றார்.இதையடுத்து, ரயில் வரும் நேரம் என்பதால் பொதுமக்களை ஓரமாக நிற்குமாறு, பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூடுதல் எஸ்.பி., தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.அதன்பின், எம்.எல்.ஏ., கூடுதல் எஸ்.பி., மாற்று வழித்தடங்களை ஆய்வு செய்ததுடன், மேம்பாலம் கட்ட வசதி உள்ளதா என பார்வையிட்டனர். ரயில்வே அதிகாரிகளிடம் பேசி இதற்குரிய தீர்வு காணப்படும் என, கூடுதல் எஸ்.பி., உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

டிச.,2ல் ஆலோசனை!

எம்.எல்.ஏ., கூறுகையில், ''வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் நிலைப்பாடாகும்.ரயில்வே கேட்டை மூடக்கூடாது; இல்லையெனில், இப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.இதற்கு கூடுதல் எஸ்.பி., சப் - கலெக்டர் தலைமையில், ரயில்வே, வருவாய்துறை, போலீசார் அடங்கிய கூட்டம் டிச.,2ம் தேதி நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். அதுவரை ரயில்வே கேட் மூடப்படாது என உறுதியளித்தார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி