தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதா கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை: தமிழ்நாடு தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசுகையில்,''இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். கட்டணம் அதிகரிக்கும். சாதாரண மாணவர் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு அரசு இச்சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. ஊழியர்கள், பேராசிரியர்கள் எதிர்காலத்தில் அரசால் தேர்வு செய்யப்படமாட்டார்கள்,'' என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு, பல்கலை ஆசிரியர் சங்க மண்டலம், 7 தலைவர் அருண்பரத் தலைமை வகித்தார். செயலாளர் முத்தரசன், அரசு உதவி பெறும் இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் அலுவலர் சங்க மாநில இணை செயலாளர் சிரில் மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.