உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலை நேரத்தில் பஸ் இயக்காததால் மறியல்; இம்மிடிபாளையம் கிராம மக்கள் ஆவேசம்

காலை நேரத்தில் பஸ் இயக்காததால் மறியல்; இம்மிடிபாளையம் கிராம மக்கள் ஆவேசம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் கிராமத்தில் பஸ் முறையாக இயக்கப்படாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், காலை, 8:00 மணி மற்றும் மதியம், 2:30 மணிக்கு அரசு பஸ் (வழித்தட எண் 19/28) இயக்கப்படுகிறது. அதேபோன்று, மாலை, 4:30 மணி (33சி), மாலை 6:00 மணிக்கு கேரளா எல்லை வரை செல்லும் அரசு பஸ் என, 4 முறை பஸ் இயக்கப்படுகிறது. இதில், காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், 30 பேர், வேலைக்கு செல்பவர்கள் உட்பட, மொத்தம் 60க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த பஸ் வாயிலாக பயணம் செய்கின்றனர். காலை நேர அரசு பஸ் அவ்வப்போது இயக்கப்படாமல் இருப்பதால், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் இம்மிடிபாளையத்தில் இருந்து, தேவராடிபாளையம் வரை (2.5 கி.மீ.,) நடந்து செல்கின்றனர். இந்நிலையில், இம்மிடிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே பள்ளி மாணவர்களுடன், பெற்றோர் இணைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில், போக்குவரத்து பாதித்தது. அங்கு வந்த, கிணத்துக்கடவு போலீசார் போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பின், இனி இது போன்று நடக்காது, பஸ்கள் முறையாக இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டாக பஸ் பிரச்னை உள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் முதல் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வரின் தனி பிரிவு வரை மனு அனுப்பி உள்ளோம். ஆனால் எந்த தீர்வும் இல்லை. காலை நேரத்தில் பஸ் இயக்கப்படாததால், மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, இடைநிற்றல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும், இம்மிடிபாளையத்தில் இருந்து கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு வேலைக்கு செல்பவர்கள், 300 முதல் 500 ரூபாய் தினக்கூலி பெறுகின்றனர். இதில், ஆட்டோவுக்கு 150 ரூபாய் செலவிடுகின்றனர். இதனால் வருவாயிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பஸ் இயக்கும் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம். வரும் நாட்களில் பஸ் முறையாக இயக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மீண்டும் பஸ் பிரச்னை ஏற்பட்டால், மக்கள் ஒன்றிணைந்து கிணத்துக்கடவு பகுதியில் பிரதான சாலையில் மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி