உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கவனத்தை ஈர்க்க போராட்டம்; பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டத்தில் முடிவு

முதல்வர் கவனத்தை ஈர்க்க போராட்டம்; பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டத்தில் முடிவு

அன்னுார்; முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த பசுமை வழிசாலை எதிர்ப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக புறவழிச் சாலை கர்நாடக எல்லை வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களுக்கு 3ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற, கோவை சத்தி பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு கூட்டம் அன்னுாரில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு) வேலுச்சாமி பேசுகையில்,அன்னுார் நகரில் 300 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலையின் அகலம் குறைவாக உள்ளது. மற்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள சாலை அகலம் 120 அடி வரை உள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம், என்றார்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி பேசுகையில், பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடந்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிக அளவில் பங்கேற்று நமது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் நிலத்தை தர மாட்டோம் என்பதில் விவசாயிகளும் பொதுமக்களும் உறுதியாக இருக்க வேண்டும், என்றார்.கூட்டத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களை சந்தித்து விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கூறுவது,போராட்ட குழு அமைப்பது, முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று மாவட்ட மக்களும் பங்கேற்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் நிர்வாகிகள் முருக சாமி, சதீஷ், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ