முன் மாதிரி அரசினர் கூர்நோக்கு இல்லம்: நேருநகரில் 16.95 கோடியில் அமைகிறது
கோவை: காளப்பட்டி நேரு நகரில்,2.21 ஏக்கர் பரப்பளவில், 16.95 கோடியில்பூஞ்சோலை முன் மாதிரி அரசினர் கூர்நோக்கு இல்லகட்டுமானப்பணிகளை முதல்வர் அடிக்கல் நாட்டி நேற்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவை துறையின் கீழ் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில், சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கு இருப்பிடம் கொடுத்து பராமரிக்கப்படுவர். சிறார்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும், சிறார்களை நல்வழிப்படுத்த, ஆற்றுப்படுத்துதல், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனைகளும், விழிப்புணர்வும், அடிப்படை திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். 2.21 ஏக்கர் இடத்தில், 10,000 சதுர அடிப்பரப்பளவில் இரண்டு தளங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் சிறார்களுக்கு தங்கும் அறைகளும், நவீன உணவு தயாரிக்கும் மையமும், உணவு அருந்தும் அரங்கு, பயிலரங்கு, விளையாட்டு திடல் உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்படும். அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி, கிழக்குமண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, பொதுப்பணித்துறை பொறியாளர் கண்ணன், கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஹபீஸா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.