கிணற்றுக்கு இரும்பு தடுப்பு; பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம் : கிணற்றுக்கு இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம், புளூ ஹில்ஸ் அவென்யூ விநாயகர் திடலில் நடந்தது. ஊராட்சி செயலர் நந்தினி வரவு செலவு அறிக்கையை, பொது மக்கள் முன்னிலையில் தாக்கல் செய்தார். பின்பு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, ஊராட்சி செயலரிடம் கொடுத்தனர். அப்போது புளூ ஹில்ஸ் அவென்யூ பொதுமக்கள் கூறுகையில்,' விநாயகர் கோவில் அருகே திறந்த வெளி கிணற்றில் தண்ணீர் நிறைந்து உள்ளது. காய்கறி மண்டி அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஏராளமான குடிமக்கள் இது வழியாக தினமும் சென்று வருகின்றனர். கிணற்றின் அருகே மது குடித்து விட்டு சிலர் நின்று நீண்ட நேரம் பேசி வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கோவில் கிணற்று தண்ணீரின் புனிதம் கெட்டுவிடும். எனவே கிணற்றுக்கு, ஊராட்சியின் சார்பில் இரும்பு தடுப்புபோட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு விளக்குகள், சாக்கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.